வந்ததோர் மின்வளவு

அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே  என்று ஆணையிட்டுச் சொன்னார் திருஞானசம்பந்தர்.  அந்த ஆணைக்கேற்ப வான் தளத்தில் அரசாள வந்துவிட்டது ஒரு வான்வளவு ! (Blog). ஆம் www.tamizharchakar.com மின்வளவு இன்று (28.01.2017) தோன்றி விட்டது!! இனி அண்ட வெளியில் அழிவின்றி ஒழிவின்றி ஆன்மீக அருந்தமிழ்
பளிச்சென ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்.

இதன் தோற்றமே உள்ளம் கவர் உயர்தோற்றமாக திருவருளால் அமைந்து விட்டது! ஆம்! இன்று பட்டம் பெற்ற தமிழ் அருட்சுனைஞர்கள் நடுவே அதாவது தமிழ் அர்ச்சகர்கள் நடுவே உலகம் உவப்ப உதித்து விட்டது  !

28.01.2017 அன்று எஸ். ஆர். எம் பல்கலைக்கழக வடபழனி வளாக கலையரங்கில் ஐந்தாம் குழாம் மாணவர்கள் சுமார் 160 பேர், பல்கலைக்கழகம் நடத்தும்  தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு படித்துத் தேறி பட்டயம் வாங்கிய பட்டமளிப்பு விழா நடந்தேறிய போது தெய்வத் தமிழ் அறக்கட்டளை முடிவெடுத்து இந்தத் தமிழ் அர்ச்சகர்களின் நலமும் வளமும் பெருகும் பொருட்டு இந்த மின்வளவு தொடங்கப்பட்டது. மேற்கூறிய பல்கலைக் கழகத்துடன் இணைந்து தெய்வத்தமிழ் அறக்கட்டளை  இந்த பட்டய வகுப்புகளை ஆறு ஆண்டுகளாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் ஐந்தாம் குழாம் மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெற அதையொட்டி தூண்டப்பட்ட சிந்தனைகள் காரணமாக துரிதமாகப் பணியாற்றி இம்மின்வளவு தோன்றியது!

Tamil Archakar Course Convocation

பட்டமளிப்பு விழாவிற்கு தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் முதுமுனைவர் செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமை வகித்தார்.  பல்கலைகழகத்தின் இணைத் துணை வேந்தரும், அதன் பிரிவுகளில் ஒன்றான தமிழ் பேராயத்தின்
தலைவருமான முனைவர் தி.போ.கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கினார்.

தமிழ் பேராயத்தின் செயலர் கரு. நாகராசன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். சித்தாந்தரத்தினம் ச. திருச்சுடர்நம்பி அவர்கள் நிகழ்ச்சிக்கு இனைப்புரை வழங்க    தெய்வத்தமிழ் அறக்கட்டளை செயலர் மா.கருப்புசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்

வாழ்த்துரையில் திரு கரு. நாகராசன்  அவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பை மேலும் சிறப்புற விரிவாக்கிட ஸ்கைப் (Skype) முறையை பயன்படுத்தலாம் என்றும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை எடுக்கும் இதற்கான முயற்சிக்குப் பல்கலைகழக  தமிழ்ப் பேராயம் உறுதுணை செய்யும் என்றும் உறுதி அளித்தார் .

பட்டயம்  வழங்கிய  இணைத் துணை வேந்தர் முனைவர் தி .பொ.கணேசன்  அவர்கள் பட்டயம் பெற்ற  மாணவர்கள் தமிழ் அர்ச்சனைத் தூதுவர்களாக பொலிந்து தமிழ் மேன்மையை கோயில்களில் மீட்டெடுக்க வேண்டும் என்றும், அதன் பொருட்டு ஒல்லும் வகையில் பல்கலைக்கழகம் பக்க பலமாக விளங்கும் என்றும் உறுதி அளித்தார்.

தலைமை உரை ஆற்றிய முதுமுனைனவர் மு.பெ.சத்தியவேல்முருகனார்  கூறியதாவது:-

“கல்வி இருவகை –  ஒன்று உலகக் கல்வி;  மற்றொன்று சாகாக் கல்வி. உலகக் கல்வியின் பயன் வேலையையும், அதன் வாயிலாக செல்வத்தையும் சேர்த்துத் தரும். ஆனால் அது நிரந்தமான இன்பத்தை அளிப்பதில்லை. அதனால் உண்மையான செல்வம் எது என குமரகுருபரர் கூறும் போது “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று பாடினார். ஆன்ம நிறைவு நிரந்தமான இன்ப வடிவினனான இறைவனில் அமைகிறது. அதை அளிப்பது ஆகமம். “கமம் நிறைந்தியலும்” என்று தொல்காப்பிய நூற்பா சொல்லதிகாரத்தில் அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே ஆன்மாவின் நிறைவான இன்பத்தை இறைவனோடு இரண்டறக் கலந்து பெறுவது எப்படி என்று கூறுவதால் அந்நூலுக்கு ஆகமம் என்று பெயர் வந்தது. ஆ என்பது உயிரைக் குறிக்கும். ‘உயிரின் நிறைவே ஆகமம். அந்தக் கல்வியே உயிர்க்கல்வி. சாகாக் கல்வி; அந்தக் கல்வியைக் கன்னல் தமிழால் பயின்று பட்டயம் வாங்கியுள்ளனர் இந்த மாணவர்கள், இதை முறையாகக் கடைப்பிடித்து முன்னேறினால் முடிவான பயன் முன்னிற்பது உறுதி .

உலகக் கல்விக்கான பட்டங்கள் உலகம் முழுவதும் பெற முடியும். அதன் மூலம் மருத்துவராகலாம், பொறியாளராகலாம், பேராசிரியராகலாம். ஆனால் ஆகமக் கல்வி என்னும் சாகாக் கல்விக்கான பட்டயம்  எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மூலம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை வாயிலாக மட்டுமே பெற முடியும். இதை அருந்தமிழால் இம்மாணவர்கள் பெற்றிருப்பது ஓர் அரிய பேறு. பெற்றதைப் பேணி தங்கள் ஆரா தமிழ்ப்பணியில் இவர்கள் இறவா வரம் பெற வாழ்த்துகின்றேன். நிகழ்ச்சி தொடங்கு முன் தமிழ்ப் பேராயத்தைச்  சேர்ந்த முனைவர் ஜே.ஜெகத்ரட்சகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

 

2 thoughts on “வந்ததோர் மின்வளவு

  1. மிக அருமை ஐயா !!
    மின்னம்பலத்தில் பொன்னம்பலம் காட்டுவிக்கும் குருபிரான் அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கும் அவர்தம் பணியினை முதற்பணியாய்க் கொண்டு தொண்டாற்றும் அடியார் பெருமக்களின் திருவடிகளுக்கும் என்றென்றும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகுக !!
    என்றும் நன்றியுடன் தஙள் தொண்டர்களின் தொழும்பன் நடராசன்.

  2. சிவாயநம!! மிக்க மகிழ்ச்சி!!! செந்தழல் ஓம்பும் செம்மை வளர்க்கும் குருபிரான் கழல் போற்றி வாழ்வோம் !! பார்போற்றிடும் அரும்நூல்களை அச்சேற்றுவோம்!!!
    சிறியேன் அடியேன்,
    மறைமலைநாயகன்

Leave a Reply to Natarajan Satchidhanantham Cancel reply

Your email address will not be published. Required fields are marked *