தமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு

தமிழ் வேதம் நூல்கள்

தமிழ் வேதம் நூல்கள்

ஒரு கதை சொல்வார்கள்! காக்கா தன் முட்டையைக் குயில் கூட்டில் வைத்துவிட்டுப் போய் விடுமாம்! குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம்! குஞ்சு வெளியே வரும் போது தான் இது தன் குஞ்சு இல்லையே என்று குயிலுக்குப் புரியுமாம்

அது போல் வடவர்கள் தமிழர்களிடம் ஒரு வேதக் கருத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார்கள்! அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும்? குயிலுக்குப் புரியும் நேரம் வந்தது போல இப்போது தமிழ் அறிஞர்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் நேரம் வந்துவிட்டது!

அப்படி ஒரு நேரம் தான் 1-1-2017 அன்று 26-வது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது! ஆம்! ஆசிரியர், செந்தமிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.

‘வேதம் த்ரயே’ என்று அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு நூல் கூறுகிறது. இதே போன்று ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வடமொழி வேதம் 3 என்றே வருகிறது. அப்புறம் எப்படி அது நாலாச்சு என்ற கேள்வி சரியான பதிலில்லாமல் தொங்கித் தொய்கிறது என்பது உண்மை தான்!

இதனெதிராக தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு தான் என்பதற்குப் பன்னிரு திருமுறைகளிலிருந்து 135 மேற்கோள்கள் இருக்கின்றன. வைணவ நாலாயிரத் தமிழும் இதை உறுதி செய்கிறது. அத்தனையும் பார்க்க இயலாவிட்டாலும் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் ஒன்று போதும்! அது வருமாறு:

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தாம்நினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கே ஆலமர் செல்வன் அன்று மொழிந்த தமிழ்வேதம் என்பதை இப்பாடலில் தெளிவுபடக் காணலாம்.

தமிழ் வேத நான்கிற்கும் நூல்கள் எங்கே என்று வெகுநாளாக பலர் கேட்ட வண்ணம் இருந்தனர். அவையோ கடல் போல தமிழில் விரிவன. எனவே தொகுத்துக் காட்டுவார் இல்லை. வடமொழி வேதங்கள் கூட வேத வியாசரால் தொகுத்த பிறகு தானே புழக்கத்தில் வந்தன. அவையும் 1930- களில் அச்சுக்கு வந்த பின் தான் அவை யாவை எனத் தெரிந்தது. அது போல தமிழ் வேதத்தையும் – இருப்பவை தாம்; இல்லாதவை அல்ல – அவற்றையும் தொகுத்து அச்சேற்றும் காலம் வந்துள்ளது.

இந்த அருமையான பணியை ஆசிரியர் செய்து அவற்றின் மாதிரி நூல்களை அவைக்கு எடுத்துக் காட்டிய போது அவையில் ஆரவாரம் எழுந்தது.

தமிழ் வேதம் நூல்கள்

தமிழ் வேதம் நூல்கள் தொகுப்பு

இவற்றை அச்சேற்ற பல லட்சங்கள் ஆகும் என்று ஆசிரியர் விளக்கியவுடன் அவையில், அதற்கென்ன நாங்களாயிற்று என்று அன்பர்கள் முன் வர சுமார் ரூ2.5 லட்சம் அங்கேயே நன்கொடையாக வந்து குவிந்தது. இது யானைப் பசிக்குச் சோளப் பொரி என்றார் ஆசிரியர். அதன் பின் பாண்டிச்சேரி அருட்சுனைஞர் மாணவர்கள் ரூ. 25,000 அளித்துள்ளனர்.

அச்சகங்களில் விசாரித்த போது இன்னும் பல லட்சங்கள் தேவைப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே, இந்த அருந்தமிழ்ப்பணி நிறைவேற, அதிலும் மிக விரைவாக நிறைவேற அன்பர்களிடமிருந்து மேலும் நன்கொடைகளை எதிர்நோக்கி உள்ளோம். உள்ளார்ந்த தமிழ் ஆர்வலர்களும் அன்பர்களும், ‘தெய்வத்தமிழ் அறக்கட்டளை’ என்னும் நமது நிறுவனத்தின் பெயரில் காசோலைகள் எடுத்து – பணப் பரிவர்த்தனையே கூடாதென்கிறது பாரத அரசு – அதற்கேற்ப காசோலைகள் எடுத்து, வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்பர்களை வேண்டுகிறோம்.

தெய்வத்தமிழ் அறக்கட்டளை
9/1 மாஞ்சோலை முதல் தெரு,
கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600032.
editor@dheivamurasu.org

எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் திருவேலிறைவன் திருவருள் தெம்பூட்டுமாக!

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா

அறத்தமிழ் வேதம்

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா

One thought on “தமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு

  1. தரணி எங்கும் தழைத்தோங்க ’ தமிழ் வேதம்’ இதோ வந்துவிட்டது !!
    தமிழ் வேதம் தனை உணர்ந்த அடியார் பெருமக்களும், தொண்டர்களும் தாராள மனம் கொண்டு பெரும் பொருளுதவி புரிந்து தமிழ் வேதம் தனை அச்சேற்றி அனைவரையும் சென்றடைய உதவி புரியும்படி எல்லாம் வல்ல இறை திருவருளை வேண்டுகிறோம் !!!

Leave a Reply to Natarajan Satchidhanantham Cancel reply

Your email address will not be published. Required fields are marked *