பணத்துக்காக கும்பிடலாமா?

‘என்னங்க உங்களுக்குப் ஃபோன்! யாரோ வெளியூரிலிருந்து பேசறாங்க!’  என்று என் மனைவி தொலைபேசியை என்கையில் கொண்டு வந்து கொடுத்தாள்.

பேசுகிறவர் யார் என விசாரித்தேன் ஊர் நாமக்கல்லாம்; பேர் யோகசிதம்பர நிதி என்றார்! ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

‘ஐயா, ஆசிரியர் சத்தியவேல் முருகனார் தானே பேசுறது?’

‘ஆம்’ என்றேன்.

‘ஐயா! உங்க நூல் திருமந்திரச் சிந்தனைகள் படித்தேன். எத்தனையோ புரிபடாத விஷயங்கள் தெளிவாச்சு. அதுல ரொம்ப ஈடுபட்டு உங்களோட பேசணும்னு ஒரு ஆசை! அதான்…’ என்று இழுத்தார்.

‘ரொம்ப நன்றி! தெளிந்ததோடு நிக்காதீங்க! தெளிந்ததைக் கடைப்பிடியுங்க! கடைப்பிடித்துத் தேறுங்க! தெளிமின் தேறுமின் ! என்று இளங்கோ அடிகளும் சொல்றாரு !’

‘ஐயா ! ஆன்மிகத்துல ஒரு சந்தேகம் !’

‘ஆன்மிகம் கடல் போல விரிவது; நீங்க ஒரு சந்தேகம்னு ஆரம்பிப்பீங்க! அது ஒராயிரத்துல போய் நிக்கும்! நான் இப்போது ஒரு வேலையா இருக்கேன். அதனால..’  என்று இழுத்தேன்.

‘ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கணும் மறுபடியும் எப்ப காண்டாக்ட் பண்ணலாம்?’

சொன்னேன். சொன்னபடி சொன்ன நேரத்துக்கு மறுபடியும் தொலைபேசியில், அவரே தான்!

‘ஐயா ! நான் ஒரு சோழிய வேளாளன்; எட்டாவது வரை படித்திருக்கிறேன். தறி நெய்யும் தொழில். முன்னெல்லாம் தொழில் நல்லா ஒடிட்டிருந்தது இப்ப சில மாசமா ரொம்ப டல்லு! அத்தியாவசிய தேவைக்குக் கூட கையிலே பணமே இல்ல பணம் வர்றதுக்கு என்ன திருமுறை பாடணும் கொஞ்சம் சொல்லுங்கய்யா’ அவர் குரல் கம்மியது.

‘தம்பி பணம் வேணும்னா சாமி கும்பிடப் போற?’

‘அவருக்கு இந்தக் கேள்வியே புரியவில்லை போலிருந்தது. கொஞ்சம் தயங்கிக் கொண்டே’ ஆமாம் ! என்றார்.

‘தம்பி ஒருத்தர்கிட்ட பணம் வேணும்னு கேட்கப் போற. அவருக்கு பணத்துக்காகத் தான் நீ வர்ற என்று தெரியும். அவரைப் பார்த்து நீ கும்பிடற பணத்துக்காக எப்படிக் கூனிக்குறுகி கும்பிடு போடுகிறான் பார்! என்று அவர் நினைக்கமாட்டாரா? சாதாரண மனிதர் நிலையே இப்படி என்றால் அண்டாண்ட கோடிகளைப் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் பரமன் உன்னைப் பற்றியும் உன் கும்பிடைப் பற்றியும் என்ன நினைப்பான் ? நீ போடற பூ காலில் பட்டு விடப் போகிறது என்று காலை இழுத்துக் கொள்ளமாட்டானா? இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்காதே! விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்று பாடுகிறார் மணிவாசகர், திருவெம்பாவையை எடுத்துப் பார்! விண்ணகத் தேவர்கள் மேல் மேல் பதவி ஏற்றம் வரவேண்டும் என்று ஆண்டவனுக்குப் பூசை என்ற பெயரில் பூ போடறாங்களாம்! அது பட்டுவிடப் போகுது என்று கூசி இழுத்துக் கொள்கிறானே அந்த மலர்ப் பாதம் என்கிறார் மணிவாசகர். தேவர்களுக்கே அப்படின்னா, நம்ம கும்பிடைப் பத்தி சொல்லவே வேணாம்!’

‘ஐயா ! ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இப்ப தான் புரியது’ அவர் தழுதழுத்த குரலில் கூறினார் !

‘நான் இடைமறித்தேன்’ – இருங்க! நான் சொல்லி முடிக்கலியே! நமக்கு வேண்டியத நம்ம தாய்-தகப்பன் கிட்ட தானே கேட்போம்! என்தாயும் எனக்கருள் தந்தையும் நீ’ என்று ஆண்டவனை வணங்குகிறோம். அப்ப, அவன்கிட்ட கேக்காம வேற யார்கிட்ட கேக்கறது?’

‘ஐயா ! உண்மை தான் ! அவர் குரலில் தெம்பு ஏறியது.

‘அதனால, சாமி கிட்டதான் பணம் கேக்கணும் சம்பந்தர் கூட சாமிக் கிட்ட தான் பணம் வாங்கி அவரது தாய் தந்தை கிட்ட கொடுத்தார். அதனால சாமி கிட்ட பணம் கேக்கறது தப்பில்ல; எப்படிக் கேக்கணும்னு தெரிஞ்சு கேட்கணும் ! சாமி ! பணம் கொடு ! எனக்காக அல்ல; என்னை நம்பி இருக்கிற குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அவங்களைக் காப்பத்தறது என் கடமை அல்லவா? அதோடு, என் தொழில் வாழ்க்கையிலும், இல்லற வாழ்க்கையிலும் எவ்வளவோ பேர் எனக்கு உதவுராங்க அவங்களுக்கெல்லாம் நான் உதவ வேணாமா? பிறருக்கு உதவாத இந்தப் பிறவி எனக்கு எதுக்கு? அதனால சுற்றிச் சூழ்ந்தவர்க்கு உதவ எனக்கும் பணம் கொடு சாமின்னு வேண்டிப் பாருங்க! சாமி, சம்பந்தர்க்குக் கொடுத்த மாதிரி உலவாக்கிழியா கொட்டும் ! சுயநலம் இருந்தால் சாமி சத்தம் போடாம நழுவிடும்; பிறர் நலம் இருந்தால் பெம்மான் வெளிப்படுவான்!’

‘ஐயா ! என்ன சொல்றதுன்னே தெரியல ஐயா ! எல்லாம் தெளிவாய் புரிஞ்சதுங்க!

‘தெளிஞ்சாப் போறாது ! தெளிந்ததில் தேறணும் ! அதாவது சாமி பணம் கொடுத்த பிறகும் இந்தத் தெளிவு இருக்கணும் ! பணம் வந்தவுடன் மனம் மாறி யாருக்கும் உதவாம எல்லாத்தையும் பின்னால் ஒதுக்கிக்கிட்டா, அவ்வளவு தான்! கொடுத்தவனே பறித்துக் கிட்டாண்டி! என்ற பழம் பாடல் போல சாமியே பறிச்சுடும்! அவனுக்கா தெரியாது?

இந்த உரையாடலால் அவர் தெளிந்து தேறுவார் என்று நம்புவோமாக! ஆம்! இனி, பணத்துக்காக கும்பிடு போடுதல் கூடாது. பணம் ஒரு பூதம்! கடவுளைக் கும்பிடுவதை விட்டுவிட்டு இந்த பூதத்தைக் கும்பிட்டால் அது பிறாண்டி விழுங்கி விடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!’

அட! பணம் சேர என்ன திருமுறை பாராயணம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே! “வாசிதீரவே காசு நல்குவீர்” எனத்தொடங்கும் சம்பந்தரின் திருவீழிமிழலைப் பதிகம் பாடுங்கள்

One thought on “பணத்துக்காக கும்பிடலாமா?

  1. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே !! மேலும் வாழ்வாங்கு வாழ
    இறைவனிடம் பொருள் வேண்டுவோர் எவ்வண்ணம் வேண்ட வேண்டும் என்பதனை குருபிரான் அறிவுறுத்திய விதம் அனைத்து அடியார்களும் உற்று நோக்கி உளம் கொள்ள வேண்டிய பெரும் பொருள் பொதிந்த உண்மை. இறையருளாம் குருவருளுக்கு நன்றிகள் பற்பல !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *