இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது

பார்த்து! பார்த்து!
இரகசியம், இரகசியம்!

அர்ச்சகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். ஆளப் படுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஒரு அரசியல் தானே! ஆக அரசியலுக்கு சம்பந்தம் உண்டு என்றாலும் அர்ச்சகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சம்பந்தம் இருக்கக் கூடாது; இருந்தால், தெய்வங்களுக்கே கட்சிக் கலர் அலங்காரங்கள் அங்கங்கே நடைபெறும் ஆபத்து உண்டு.

ஆட்சி எதுவானாலும் அறநிலையத்துறை அதில் இருக்கும். என்றால், அவ்வகையில் அர்ச்சகர்களும் அரசியல் தொடர்புடையவர்கள் தாமே!

இனி, அரசியலில் சட்ட சபையில் 18-2-2017-ல் நடந்த சம்பவங்கள் பற்றிய சட்டச் சிக்கலைப் பற்றி கருத்து கொள்வதில் தவறில்லை. நன்றாகக் கவனிக்க வேண்டும். நமக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வெகு தூரம்! இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவது சட்டச் சிக்கலே!

18-2-2017 அன்று சட்ட சபையில் எடுத்துக் கொள்ளப் பட்டது நம்பிக்கை வேண்டும் தீர்மானம் தான். எதிர்க்கட்சிகள் இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் மறுத்துவிட்டார். மதிப்பின் மிக்க முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் இப்படிக் கூறியதாக 23-2-2017 நாளிட்ட “தி இந்து” தமிழ் நாளிதழில் ஒரு செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.

“யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாவிட்டால் கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. (ஆகவே) இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது கட்சித் தாவல் தடை சட்டத்துக்கு எதிரானது. எனவே இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது.”

இதில் மிக முக்கியமான கருத்து என்னவென்றால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளானவர்கள் இருவருமே ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே இதில் கட்சித் தாவல் என்பதே பொருந்தாது. அப்படிச் சட்டப்படி பொருந்த வேண்டும் என்றால் இருவரில் ஒருவரை வேறு கட்சியினர் என சட்டப்படி அறிவித்தால் தான் அந்தச் சட்டம் பொருந்தும். அவ்வாறின்றி ஒரே கட்சியினசிடையே யாருக்குப் பெரும்பான்மை என்பதை அறிவிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சித் தாவல் தடை சட்டம் எப்படித் தலையிட முடியும்?

இல்லை, எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சி போட்டியாளர்க்கு இடையே ஒருவர்க்கு வெளிப்படையாக வாக்களித்து விட்டால் என்ற வாதத்திற்கே இடமில்லை. கட்சித்தாவல் சட்டம் அவர்கள் மீது பாயும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இல்லை இரகசிய வாக்கெடுப்பில் இரகசியமாக ஒருவர்க்கு எதிர்க் கட்சியினர் வாக்களித்து விட்டால் கட்சித் தாவல் தடைச் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதே என்று ஒரு வாதம் எடுத்து வைக்கப் படலாம். அதுவும் இங்கே நடப்பதற்கே வாய்ப்பில்லை. காரணம் எதிர்க் கட்சியினர் ஒட்டு மொத்தமாக இரகசிய வாக்கெடுப்பில் ஒருவர்க்கு வாக்களித்தாலும் அந்தக் குறிப்பிட்ட ஒருவர் பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என்பது குழந்தைக்குக் கூட தெரியும். எனவே அதற்கும் வாய்ப்பே இல்லை. அத்துடன் எதிர்க் கட்சிகள் வாக்கெடுப்பிற்கு முன்னமேயே, இது உட்கட்சி பூசல்; அதனால் இப் பூசல் நாயகர்கள் இருவருக்குமே எங்கள் ஆதரவு ஒருபோதும் கிடையாது என்றும் தெளிவு படுத்தி விட்டனர்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் வாக்கெடுப்பு ஒரே கட்சிக்குள்ளே தான் என்பதால் கட்சித்தாவல் சட்டம் பயனுக்குள் வராது. எதிர்க் கட்சிகள் ஒட்டு மொத்தமாக இவ்விருவரிடையே ஒருவர்க்கு ஆதரவு அளித்தாலும் கட்சித் தாவல் சட்டம் பயனுக்குள் வராது. காரணம், 45 பேருக்கு மேல் (அ) மூன்றில் ஒரு பங்கினர் இப்படி வாக்களித்தால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய அச்சட்டத்தில் இடமில்லை.

இதை விட இன்னொரு பொருந்தாத பெரிய விஷயம் இதில் உள்ளது. அதாவது ஒரே கட்சியில் உள்ள இருவரில் ஒருவர் தான் தன்கு 124 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். மற்றொருவரோ தனக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதைத் தெரிவிக்காமலே போட்டி இடுகிறார். அவர் எண்ணிக்கையைத் தெரிவிக்காத நிலையில் அக்கட்சியின் மொத்த உறுப்பினர்களான 134-ல் இருந்து 124-ஐக் கழித்தால் எண்ணிக்கை தெரிவிக்காதவர்க்கு 10 பேர்தான் ஆதரவு என்று தெளிவாகத் தெரிகிறது.

அப்படி இருக்கும்போது போட்டிக்கு நிற்கும்போதே கட்சித்தாவல் தடைச் சட்டப்படி உறுப்பினர் பதவியிலிருந்து அவரும் அவரது ஆதரவாளர்கள் 10 பேரும் நீக்கப் பட வேண்டியவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை எதிரிட்டு, இவருக்கா அல்லது அவருக்கா உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஆதரவு என்று எப்படி ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இயலும்? அடிப்படையே தகர்ந்து விடுகிறதே!

ஒரு வேளை இவையெல்லாம் நீதி மன்றம் அனுமதித்துள்ள இதுபற்றிய வழக்கில் தெளிவாகலாம். அதற்குமுன் இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமற்றது என்று சொல்வது தான் நியாயமற்றது என நியாயமாகக் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *