திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்

செந்தமிழ் அந்தணர், மாணவி தெய்வத்திரு. ந. கிருஷ்ணவேணி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (19.02.2017)

ஒன்பதாம் திருமுறை முற்றோதல்

திதி என்பது பொதுவாக அன்றைய பிறை நாளைக் குறிக்கும். ஒருவர் துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இரு விசும்பு ஏறு நாள் எதுவோ அது அவரைப் பொறுத்தமட்டில் அவருக்கு உரிய தொடர்புடைய பிறை நாள் – அதாவது திதி ஆகும். அதே திதி அடுத்த ஆண்டு வரும் போது அவரது நினைவை ஏந்தி கொண்டாடுவது வழக்கில் அவருடைய திதி என்று பேசப்படுகிறது. திதி என்ற சொல்லிலிருந்துதான் தேதி என்ற சொல் வந்தது. இன்றைக்கு தேதி என்ன தேதி என்று வழக்கில் கேட்பதுண்டு. ஆனால் தூய தமிழில் இன்றைக்கு என்ன நாள் என்று கேட்பதே சரி.

இன்றைக்கு (19.02.2017) தமிழ் அருட்சுனைஞர் பட்டயம் பெற்று தமிழ் நாட்டில் சில கோயில்களிலும் சில வீட்டு நிழச்சிகளையும் செய்து தமிழைப் பரப்பி வந்த நமது மாணவி தெய்வத்திரு ந. கிருஷ்ணவேணி அவர்களின் திதி. அதாவது அவர்கள் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள்.

இந்த நினைவு நாள் இன்று ஒன்பதாம் திருமுறை முற்றோதலுடன் கொண்டாடப்பட்டது. இது என்ன, இப்படித்தான் திதியைக் கொண்டாட வேண்டுமா? இது புதிதாக இருக்கிறதே என்று சிலர் வியப்படையலாம். உண்மையில் தமிழாகமப்படி ஒருவரின் நினைவு நாள் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். இறந்தவரை அவர் இறந்த சில நாட்கள் கழித்து  நினைந்து போற்றி ஆற்றும் திருவடிப்பேறு (காரியம்)  நிகழ்ச்சியில் அவரது உயிர் தமிழாகமப்படி பிறவி அறும் வழிபாடாக நடத்தப் பெற்று இறையோடு நிலையாக இரண்டறக் கலந்துவிடச் செய்யப்படும். எனவே, அந்த உயிரை திருவடிப்பேற்று வழிபாட்டால் சிவமாக்கிவிடச் செய்யப்பெறுகிறது. சிவமாகிய அந்த உயிருக்கு திதி நாளில் அதாவது ஆண்டு நினைவு நாளில் சிவமாகக் கருதி செய்யப்படும் திருமுறை முற்றோதல் வழிபாடே அவ்வுயிருக்கு வேண்டுவது. மாறாக, இதுபோன்ற திதி நாளில் பிண்டம் பிடித்து செய்யப்படும் வழிபாடு அந்த உயிரை மீண்டும் நிலையிறங்கச் செய்து நிலை கலங்கச் செய்துவிடும். எனவே தான் இராமலிங்க வள்ளலார் இறந்தவர்க்கு இது போன்ற பிண்ட வழிபாடு செய்யும் திதி செய்தல் வேண்டாம் என்று உபதேசத்தில் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். சிவமான உயிரை சிவமாகவே வைப்பதோடல்லாமல் இங்கு கூறிய திருமுறை முற்றோதல் மேலும் உயர் நிலைக்கு உயிரைக் கொண்டு செல்லும். காரணம், முற்றோதல் வழிபாடுகள் அடியார்களைக் கொண்டு செய்யப்படுவது; அடியார் பூசையாகிய மாகேசுர பூசையுடன் அவர்களுக்கு சோறிடுதலோடு முடிவது.

திருமூலர் அடியார்களை உண்பித்தால் அவர்கள் வயிற்றில் இடும் திலமத்தனை சோறு அளவிறந்த புண்ணியங்களைத் தரும் என அறுதியிட்டுக் கூறுகிறார்.

அடியார் பகலூண் பலத்திற்கு நிகரில்லை தானே !!” என்பது அவரது வாக்கு.

எனவே, அன்பர்கள் இனியாவது பிறவற்றின் தாக்கத்தால் மயங்காமல் இறந்தவரின் ஆண்டு நாட்களை திருமுறை முற்றோதல் வழிபாட்டு நாளாகக் கொள்ளுவதே சிறப்பு. இந்த சிறப்புதான் மேற்படி மாணவிக்கு இன்று செய்யப்பட்டது.

இன்று அம்மையாரின் உயிர் மேம்பட அவரை சிவமாகவே வழிபட்டு, ஒன்பதாம் திருமுறை முற்றோதல் அடியார்களால் செய்யப்பட்டு, அவர்களுக்கு சோறிடுதலுடன் வழிபாடு நிறைவு பெற்றது.

இவ்வழிபாடு ஆசிரியர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல்முருகனார் அவர்கள் நெறிகாட்ட நிகழ்ந்தேறியது. இவ்வழிபாட்டிற்காக ஆசிரியர் அம்மையார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற பொழுது, அடியார்கள் குருபிரான் அவர்களைக் கும்பத்தோடு, வரவேற்கின்ற காட்சி, இதோ !!

krishnaveni-9th-thirumurai-mutrothal

 

5 thoughts on “திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்

 1. சிவசிவ

  குருபிரான்
  திருவடிகள் போற்றி போற்றி

 2. நமசிவாயம்
  நமசிவாயம்
  நமசிவாயம்
  நமசிவாயம்
  நமசிவாயம்

 3. I follow and declare MUPa.sathyavel muruganar as my beloved Guruji regardings saiva agamas and saiva anuttanam. his works are great and valuable.

 4. தமிழ் மொழிக்கு உயர்வு வரமேண்டும் என்றால், தெய்வ தமிழ் நம் இறைவழி பாட்டில் இருக்கவேண்டும். இறைவன் சிலரை அதற்காக படைத்து திறமையாக செயல்பட வைத்து, தெய்வ தமிழ் ஆலயங்களில் முழங்கவும், அய்யா ஆசிரியர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல்முருகனார் அவர்கள் உழைப்பை பெரிதும் போற்றி 9 சமய தீட்சைகள் அனைத்திற்கும் தமிழில் யாகம் செய்து, தமிழ் முறைப்படியான அனுட்டானங்கள் செய்ய அய்யா வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும். காயத்ரி மந்திரம் எப்படி வந்தது. இதன் மூலம் தமிழ் மொழியில்தான் இருந்து இருக்கவேண்டும். காயத்ரி தீக்சை வட மொழியாளர்களின் அடிப்படையாக இருக்கிறது. இதை இவர்கள் எப்படி பெற்றார்கள். உபநயனம் செய்து கொள்ளும் வழக்கம் இவர்களிடையே எப்படி வந்தது … இன்னும் பல கருத்துக்கள் அறியப்பட வேண்டியது அவசியம் ஆகிறது. எனக்கு இவர் தான் வெளிச்சம் தரும் குரு. அய்யா இது குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் , புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்று இறைவழி உந்துதலால் வேண்டி கொள்கிறேன். எல்லாம் வல்ல நம் பெருமான் அய்யா மூலம் வழிவகை செய்யவேண்டும்.

Leave a Reply to M.Sivakumaran. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *