அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்


கணபதி
துணை

அம்மா பேரு . . . அம்ம்ம்மா

                                                    கலம்பகக்கவி இரா.உமாபதி

திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர்

                  அன்று அன்னையர் தினம். காலை நேரம்.

       அதனால் அந்த மழலையர் பள்ளியில் உள்ள வாண்டுகளிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் அப்பள்ளியின் தாளாளர்.

       உன்னுடைய அம்மா பேர் என்ன ?

       ஓரிரு நிமிடங்கள் யோசித்து தம்தம் தாயாரின் பெயர்களை மழலை மொழியில் சொன்னதும், அவர் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மிட்டாய்ப் பொட்டலத்தை அன்னையர் தினப் பரிசாக வழங்கினார்.

       கடைசியாக ஒரு குழந்தை மட்டும் ரொம்ப நேரம் யோசித்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்தது. பிறகு ஒரு வழியாக,

“அம்மா பேரு. . . வந்து . . . வந்து . . . அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ”

என்று திக்கித் திணறிச் சொல்லி சமாளித்தது.

      சுற்றியிருந்த மற்ற வாண்டுகளும் ஆசிரியர்களும் ‘கொல்’ என்று சிரித்து விட்டார்கள். அவமானம் தாங்காமல் அந்தக் குழந்தை அழத் தொடங்கியது.

      நிலைமையைச் சமாளிப்பதற்காக தாளாளர், ‘‘நல்ல வேளை, அம்மா பேரு மம்ம்ம்மீ என்று சொல்லாமல் விட்டாயே” என்று கூறி இரண்டு மிட்டாய்ப் பொட்டலங்களை அதன் கைகளில் திணித்து அந்தக் குழந்தையின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து அழுகையை நிறுத்தினார்.

     அந்தக் குழந்தை ஏன் தன் தாயார் பெயரை மறந்து விட்டது? என்று யோசிக்கத் தொடங்கினார் தாளாளர்.

     பிறகு, குழந்தைகளின் விவரப் பதிவேட்டினைக் கொண்டு வருமாறு வகுப்பு ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். அதில் அந்தக் குழந்தையின் அம்மா பெயரைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

     ‘அபீத குஜாம்பாள்’

     நம்முடைய வாயிலேயே இந்தப் பெயர் நுழைவதற்குச் சற்றுச் சிரமமாய் இருக்கிறதே! அந்தப் பிஞ்சு நெஞ்சில் எப்படி இந்தப் பெயர் பதியும்? அப்படியே பதிந்தாலும் அந்த மழலையின் வாயிலிருந்து எப்படி வெளிவரும்? அம்மாவை அம்மா அம்மா என்று அடிக்கடி அழைத்துப் பழக்கப்பட்ட சிறுகுழந்தைகளுக்கு அவளின் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது. மற்ற குழந்தைகளுங் கூட ஓரிரு நிமிடங்கள் யோசித்துத்தான் பதில் கூறின. மேலும் அவள் பெயர் உச்சரிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருந்தால் அவ்வளவு தான்! அந்தக் குழந்தை படாத பாடு பட்டுவிடும்.

    ‘அறியான் வினாப்படுதல் இன்னா’

என்று சங்க காலப் புலவரான கபிலர்  ‘இன்னா நாற்பது’ என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலின் 37ஆம் பாடலில் கூறியிருக்கிறார். நமக்கே இந்த அனுபவம் என்றால் அந்தப் புலவருக்கு எவ்வளவு அனுபவம் இருந்திருக்கும்? மிகுந்த அனுபவம் இருந்ததனால் தான் கபிலர் மறக்காமல் இதைத் தம் நூலில் பாடிப் பதிவு செய்துள்ளார் என்று சங்க காலத்திற்குள் ஆழ்ந்தார் தாளாளர்.

     இனி மேல் எந்தக் குழந்தையிடமும் ‘உன் அம்மா பேரு என்ன?’ என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது என்று வெறுத்துப் போன மனதுடன் சபதம் மேற்கொண்ட தாளாளர் மகிழுந்தில் ஏறிக் கொண்டு நேராகத் தனது இல்லத்திற்குப் போகும் படி ஓட்டுனரிடம் கட்டளையிட்டார்.

    வீடு வந்து சேர்ந்த தாளாளர் மதிய உணவு அருந்தி விட்டு வரவேற்பறையில் அமர்ந்தார். அருகிலிருந்த குறிப்பேட்டினை எடுத்துப் புரட்டினார். அதில்,

ஸ்ரீ குமரகுருபரர்

தோற்றம்: 24 – 06 – 1625

முத்தி: 08 – 05 – 1688

சண்முகக் கவிராயர் சிவகாமசுந்தரி இணையரின் திருமகனாக உதித்து 63 ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியுள்ளார்.

என்று இருந்தது.

     அந்தக் குறிப்பேட்டில் உள்ளவை ஒரு கந்தன் கவினறுமை (கந்த சட்டி) விழாவின் போது ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றத்தின் ஆதரவில் ஆதம்பாக்கம் சிவப்பிரகாசர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவில் செந்தமிழ்வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொல்லக் கேட்டு எழுதப்பட்ட குறிப்புகள் ஆகும்.

     பொதுவாக குமரகுருபரர் காலம் எது என்று கேட்டால் நாம் உடனே ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்று விவரமில்லாக் குழந்தை கூறுவதைப் போல கி.பி. 17 ஆம் நூற்றாண்டு என்போம். ஆனால் நாள் மாதம் ஆண்டுக் குறிப்புடன் சொன்னால் தான் சிறப்பு.

     குமரகுருபரர் காலம் மிகவும் அண்மைக் காலம் ஆகும். இவருக்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் – சம்பந்தர் ஆகியோரின் காலத்தை நம்மால் துல்லியமாகக் கணக்கிட முடியுமா? என்ற கேள்வி எழுவது நியாயம் தான். ஆனால் கி.மு.வில் வாழ்ந்த அசோகச் சக்கரவர்த்தி, அலெக்சாண்டர் முதலான மன்னர்கள் புத்தர், மகாவீரர் முதலான சமயத் தலைவர்கள் கால வரம்புகள் வரலாற்றுப் புத்தகங்களில் காணக் கிடைக்கின்றனவே! அப்படியிருக்கும் போது அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த அப்பர் – சம்பந்தர் ஆகியோரின் கால வரம்புகள் கிடைக்காமலா போய்விடும்?

     தமிழகத்து நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், சிவஞானிகள், அருளாளர்கள், மாமன்னர்கள் ஆகியவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் தெளிவாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணியவாறே சுவரில் மாட்டப்பட்டிருந்த நால்வர் திருவுருவப் படத்தைப் பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கினார் அந்தத் தாளாளர்.

    திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சமகாலத்தவர்கள்; கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்ற ரீதியில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர்கள் உள்ளனரா? என்ற ஆவல் தாளாளருக்கு ஏற்பட்டது.

    அந்தத் தாளாளர்  புத்தகப் புழுவாக மாறிப் பல நாள்கள் நூலகத்தில் தேடித் துருவி ஒரு பட்டியலை உருவாக்கிவிட்டார். இந்த ஆராய்ச்சி ‘வாதாபி கணபதி – புதிய சிந்தனை’ என்ற நூலில் (முதற்பதிப்பு சூன் 1988) அதன் ஆசிரியர் திரு.இரா.வீரபத்திரன் அவர்கள் கொடுத்துள்ள செய்திகள் ஆகும். இச்செய்திகளை அட்டவணைப் படுத்தும் ஒரு சிறிய வேலை மட்டுமே அந்தத் தாளாளர் செய்தார். இதில் காணும் முடிபுகளுடன் திருவாளர் ச.சச்சிதானந்தம் பிள்ளை B.A.B.L., மற்றும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D ஆகியோரின் முடிபுகளும் ஒத்துப் போகின்றன என்பதையும் இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில் காணலாம்.

 

கி.பி.

ஆண்டு

நிகழ்ச்சி அப்பர்

வயது

சம்பந்தர்

வயது

திலகவதியார்

வயது

572 திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்-மாதினியார் இணையர் மகளாகத் திலகவதியார் திருவவதாரம்

 

575 திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்-மாதினியார் இணையர் மகனாக திலகவதியார் தம்பியாக மருணீக்கியார் (அப்பர் என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள்) திருவவதாரம் 3
578 மருணீக்கியார் 3 வயதில் மயிர் வினை மங்கலம் 3 6
580 மருணீக்கியார் 5 வயதில் கல்வி பயிலல் 5 8
584 பலகலையும் கற்று இளம்பிறை போல் மருணீக்கியார் வளருதல் & திலகவதியாருக்குக் கலிப்பகையாரைத் திருமணம் நிச்சயித்தல் 9 12
589 கலிப்பகையார் போரில் வீரமரணம் அடைதல் 14 17
600 அப்பர் சமணம் புகுதல் & மகேந்திர வர்ம பல்லவ மன்னன் ஆட்சி தொடக்கம் 25 28
611 மகேந்திரவர்ம பல்லவ மன்னன் காஞ்சி அருகில் இரண்டாம் புலிகேசியைப் போரில் முறியடித்து துரத்துதல் 36 39
615 தமக்கை திலகவதியாரிடம் திருநீறு பெற்று திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயம் திரும்புதல், கூற்றாயினவாறு பதிகம் ஓதி சூலைநோய் நீங்கப்பெறுதல்.  மகேந்திர வர்மன் செய்த கொடுமைகளில் இருந்து சிவனருளால் சுவாமிகள் மீண்டு வருதல். மகேந்திர வர்மன் சைவனாகிச் சைவ வைணவக் கோயில்கள் கட்டத் தொடங்குதல். 40 43
630 பதினைந்து ஆண்டுகள் சைவ சமயத் திருக்கோயில் கட்டும் பணிசெய்த மகேந்திர வர்மன் மறைவு. அவன் மகன் நரசிம்மவர்மன் ஆட்சி தொடக்கம் 55
638 சீகாழியில் சிவபாத இருதயர்-பகவதியம்மையார் புதல்வனாகத் திருஞானசம்பந்தர் திருவவதாரம் 63 0
641 சம்பந்தர் ஞானப்பால் அருந்துதல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகம் அருளுதல் 66 3
642 இரண்டாம் புலிக்கேசி மீது நரசிம்மவர்ம பல்லவ மன்னன் போர் தொடுத்தல். பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதியார் வாதாபி வரை சென்று புலிக்கேசியுடன் போர்  புரிந்து வெற்றி பெறுதல். பரஞ்சோதி சேனாதிபதிப் பணியிலிருந்து விலகி சிறுத்தொண்டராக செங்காட்டங்குடி திரும்பி சிவத்தொண்டு புரிதல். 67 4
644 சிறுத்தொண்டர் திருமகனாராக சீராள தேவர் திருவவதாரம் 69 6
645 சீகாழியில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம் நிகழ்தல்.  சீகாழியில் சம்பந்தர் – அப்பர் முதல் சந்திப்பு. 70 7
647 சீராள தேவர் 3 வயதில் மயிர் வினை மங்கல நிகழ்ச்சி 72 9
649 திருப்புகலூர் முருக நாயனார் மடத்தில் அப்பர் – சம்பந்தர் இரண்டாவது சந்திப்பு. 74 11
649 திருஞானசம்பந்தரின் திருச்செங்காட்டங்குடி விஜயம் 74 11
649 திருப்புகலூர் முருக நாயனார் மடத்தில் அப்பர் – சம்பந்தர்  மூன்றாவது சந்திப்பு. சிறுத்தொண்டர் சம்பந்தரை முருக நாயனார் மடத்தில் கடைசியாகச் சந்தித்தது. 74 11
649 சீராளன் 5 வயதில் பள்ளியில் சேர்த்தல். சிறுத்தொண்டர் வடநாட்டுப் பைரவரின் சோதனைக்கு ஆளாதல். சோமாஸ்கந்தர் தரிசனம் பெற்று சிறுத்தொண்டர் குடும்பத்துடன் முத்தியடைதல். 74 11
650 சம்பந்தருக்கு மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் அழைப்பு. சம்பந்தர் பாண்டிய நாட்டில் அனல் வாதம் புனல் வாதம். பாண்டி நாட்டுத்தலங்கள் தரிசனம். 75 12
650 பழையாறையில் சமணர் மறைத்த இறைத்திருவுருவை அரசன் மூலம் வெளிப்படுத்தி அப்பர் வழிபடுதல். பைஞ்ஞீலியில் இறைவன் பொதிசோறு அருளல். காளத்தி வழிபாடு. கயிலை யாத்திரை. பூந்துருத்தியில் மடம் அமைத்துப் பணிசெய்தல். 75 12
652 சம்பந்தர் அப்பர் நான்காவது சந்திப்பு – திருப்பூந்துருத்தி அப்பர் திருமடம். அப்பர் எங்குற்றார்? என்று சம்பந்தர் வினவ அடியேன் உம் அடிகள் தாங்கி இங்குற்றேன் விடை பகர்ந்தார் அப்பர். 77 14
654 சம்பந்தர் தமது திருமணத்தின் போது முருக நாயனார், நீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலியோருடன் சோதியிற் கலந்து முத்தி பெறுதல். 79 16
656 அப்பர் திருப்புகலூர்க் கோயிலுக்கு வந்து திருத்தொண்டு செய்து ‘எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ’ எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடி முத்தி பெறுதல் 81

நன்றிஇரா.வீரபத்திரன் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர், கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்

இந்தக் கால ஆய்வினைச் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்கிறார் திரு.வீரபத்திரன் அவர்கள் :

      “ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் காலத்தைச் சற்று மாற்றி அமைக்க முயன்றால், அது மற்றோர் நிகழ்ச்சியின் காலத்தோடு முரணுற்று நிற்பதைக் காண்கிறோம். சதுரங்க ஆட்டத்தில் ஒரு காயை இடம் பெயர்க்க முயலும் போது மற்றக் காய்களின் நிலை பாதிக்கப்படுவதைப் போன்ற ஓர் அனுபவம் உண்டாகிறது.” எனினும் மேலே கூறிய காலவரையறை முற்றிலும் சரி என்றோ, முடிந்த முடிபு என்றோ கூற வரவில்லை. ஆனால் எந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கூறப்பட்ட காலமும் 2 அல்லது 3 ஆண்டுகள் முன் பின்னாக, உண்மைக்கு மிக அணித்ததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இங்கு நிகழ்த்திய ஆராய்ச்சியைத் தற்காலிகமாகக் கொண்டு மேலும் ஆதாரங்களைத் திரட்டி ஆராய்வதானால் இதனினும் துல்லியமான முடிபுகளைக் காண்பதற்கு இடனாகும். அத்தகைய முயற்சியில் அறிஞர்கள் தலைப்படுவதற்கு இஃதோர் தூண்டுதலாக அமைவதாக!

       சைவ சித்தாந்த மகா சமாஜம் 1941ல் பதிப்பித்து வெளியிட்ட ‘திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள்’ என்ற நூலின் முகப்பில், திருவாளர் ச.சச்சிதானந்தம் பிள்ளை B.A.B.L., அவர்கள் எழுதிய திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரத்தில், அவர்கள் ‘அப்பர், கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதாரம் செய்தார்’ என்றும், ‘அவர் மாதொரு பாகன் மலரடிக் கீழ்த் தங்கிவிட்ட காலம் 655-ஐ ஒட்டி இருக்கலாம்’ என்றும் இரு நிகழ்ச்சிகளின் காலத்தைக் குறித்து எழுதியிருப்பது, நான் கூறிய முடிபுகளை ஒத்திருப்பதைக் கண்டு இறும்பூதும், பெருமகிழ்வும் அடைகிறேன்.”

டாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி (முதற்பதிப்பு 1948, 2ஆம் பதிப்பு மார்ச்சு 1960, 3ஆம் பதிப்பு டிசம்பர் 1990)

பக்கம் 41

         அப்பர் 81 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கொள்வதாலும், அவர் பல ஆண்டுகள் சமண சமயத்தில் ஈடுபட்டிருந்து பிறகே சைவரானார் என்பதனாலும், சம்பந்தர் அவரது முதுமை நோக்கி ‘அப்பரே’ என அழைத்தமையாலும், அவரது (அப்பர்) காலம் ஏறத்தாழக் கி.பி. 580-660 எனக் கொள்ளலாம்.

இக்கால எல்லைக்குள்,

 1. மகேந்திரன் ஆட்சி (கி.பி.615-630),
 2. 2. நரசிம்மன் ஆட்சியின் பெரும் பகுதி (கி.பி.630-668)
 3. 3. வாதாபிப் படையெடுப்பு (கி.பி.642),
 4. 4. நெடுமாறன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதி (640-680)

என்பன அடங்கி விடுகின்றன.

         வாதாபிப் போருக்குப் பிறகு சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியில் குடியேறிச் சிவத்தொண்டில் ஈடுபட்டவர். சம்பந்தர் வயது 16 என்ற கர்ண பரம்பரைக் கூற்றை நம்பினால், சிறுத்தொண்டரைச் சம்பந்தர் சந்திக்கையில் ஏறத்தாழ 10 வயதுடையராகலாம்; அதன் பிறகே சம்பந்தர் மதுரை சென்று நெடுமாறனைச் சைவனாக்கி மீண்டார். ஆகவே, உத்தேசமாகச் சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்த காலம் கி.பி. 650 எனக் கொள்ளலாம். கொள்ளின், சம்பந்தர் பிறப்பு ஏறத்தாழக் கி.பி.640 எனவும், முத்தியடைந்த ஆண்டு ஏறத்தாழக் கி.பி.656 எனவும் ஆகும். ஆகவே, சம்பந்தர் காலமும் (கி.பி.640-656) முற்சொன்ன அப்பர் காலத்துள் அடங்குதல் காண்க.

டாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி (முதற்பதிப்பு 1948, 2ஆம் பதிப்பு மார்ச்சு 1960, 3ஆம் பதிப்பு டிசம்பர் 1990)

பக்கம் 57.

  “. . . ஆதலின், அவர் (அப்பர்) சைவராக மாறின பொழுது குறைந்தது 35 அல்லது 40 வயதினராதல் வேண்டும். அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவர் என்ற கர்ண பரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கி.பி.580 – 660 எனக் கோடல் பொருத்தமாகும். சம்பந்தர் வயது கர்ண பரம்பரைக் கூற்றை நம்பி 16 எனக் கொண்டு, அவர் சிறுத்தொண்டரைச் சந்தித்த போது அவர் வயது சுமார்10 எனக் கொள்ளின் அவர் காலம் சுமார் கி.பி. 640 – 656 என்றாகும். இந்தக் காலம் பொருத்தமானதென்பது அவர் வரலாற்று நிகழ்ச்சிகளை முறைப்படுத்திக் காணின் நன்கு விளங்கும்.”

      இந்தத் தரவுகளின் துணை கொண்டு ஆண்டுவாரியாகப் பதிகங்கள் அருளப்பட்ட கால அடைவுகளையும் அப்பர் சம்பந்தர் வரலாற்று நிகழ்வுகளையும் பெரியபுராணத்தின் துணையுடன் துல்லியமாகக் கண்டு பிடித்து மேற்காணும் அட்டவணையை விரிவுபடுத்தி முழுமையடையச் செய்தல் சைவர்களாகிய நமது தலையாய கடமையாகும்.

      இனி மேலும் அப்பர் சம்பந்தர் ஆகியோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்பது போலச் சொல்லாமல் திருநாவுக்கரசர் காலம் கி.பி. 575 – 656 என்றும் திருஞானசம்பந்தர் காலம் 638 – 654 என்றும் தெளிவாகச் சொல்வோமாக!

 

3 thoughts on “அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்

 1. “அம்மா பேரு . . . அம்ம்ம்மா” கட்டுரை புள்ளிவிவரங்களுடன் சிறப்பாக உள்ளது! கலம்பக கவியாருக்கு நன்றி!

  திருநாவுக்கரசர் காலம் கி.பி. 575 – 656 என்றும் திருஞானசம்பந்தர் காலம் 638 – 654 என்பதை … திருநாவுக்கரசர் காலம் தி.பி. 606 – 687 என்றும் திருஞானசம்பந்தர் காலம் தி.பி. 669 – 685 என்றும் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா…?

  அன்புடன்
  சாமி

  • Nowdays historian do not use AD and BC for denoting years. It is BCE – Before Common Era for BC and CE- Common Era for AD.

 2. ஐயா கலம்பகக் கவி சிவத்திரு. உமாபதி அவர்களின் கட்டுரை, அம்மாவைக் காட்டி, அப்பனைக் காட்டி, அம்மையப்பரின் அடியார் தம் கால அடைவினையும், அவர்தம் அருளிச் செயலையும் ஆய்வு நோக்கில் காட்டி அடியார்க்கு அடியாரின் அருந்தமிழ் தன் வீச்சினையும் காட்டுவித்துள்ளது என்றால் மிகையில்லை. நன்றி !! கலம்பகக் கவியாரின் தமிழ்த் தொண்டு ஓங்குக !!

Leave a Reply to ச. நடராசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *