திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்

செந்தமிழ் அந்தணர், மாணவி தெய்வத்திரு. ந. கிருஷ்ணவேணி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (19.02.2017)

ஒன்பதாம் திருமுறை முற்றோதல்

திதி என்பது பொதுவாக அன்றைய பிறை நாளைக் குறிக்கும். ஒருவர் துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இரு விசும்பு ஏறு நாள் எதுவோ அது அவரைப் பொறுத்தமட்டில் அவருக்கு உரிய தொடர்புடைய பிறை நாள் – அதாவது திதி ஆகும். அதே திதி அடுத்த ஆண்டு வரும் போது அவரது நினைவை ஏந்தி கொண்டாடுவது வழக்கில் அவருடைய திதி என்று பேசப்படுகிறது. திதி என்ற சொல்லிலிருந்துதான் தேதி என்ற சொல் வந்தது. இன்றைக்கு தேதி என்ன தேதி என்று வழக்கில் கேட்பதுண்டு. ஆனால் தூய தமிழில் இன்றைக்கு என்ன நாள் என்று கேட்பதே சரி.

இன்றைக்கு (19.02.2017) தமிழ் அருட்சுனைஞர் பட்டயம் பெற்று தமிழ் நாட்டில் சில கோயில்களிலும் சில வீட்டு நிழச்சிகளையும் செய்து தமிழைப் பரப்பி வந்த நமது மாணவி தெய்வத்திரு ந. கிருஷ்ணவேணி அவர்களின் திதி. அதாவது அவர்கள் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள்.

இந்த நினைவு நாள் இன்று ஒன்பதாம் திருமுறை முற்றோதலுடன் கொண்டாடப்பட்டது. இது என்ன, இப்படித்தான் திதியைக் கொண்டாட வேண்டுமா? இது புதிதாக இருக்கிறதே என்று சிலர் வியப்படையலாம். உண்மையில் தமிழாகமப்படி ஒருவரின் நினைவு நாள் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். இறந்தவரை அவர் இறந்த சில நாட்கள் கழித்து  நினைந்து போற்றி ஆற்றும் திருவடிப்பேறு (காரியம்)  நிகழ்ச்சியில் அவரது உயிர் தமிழாகமப்படி பிறவி அறும் வழிபாடாக நடத்தப் பெற்று இறையோடு நிலையாக இரண்டறக் கலந்துவிடச் செய்யப்படும். எனவே, அந்த உயிரை திருவடிப்பேற்று வழிபாட்டால் சிவமாக்கிவிடச் செய்யப்பெறுகிறது. சிவமாகிய அந்த உயிருக்கு திதி நாளில் அதாவது ஆண்டு நினைவு நாளில் சிவமாகக் கருதி செய்யப்படும் திருமுறை முற்றோதல் வழிபாடே அவ்வுயிருக்கு வேண்டுவது. மாறாக, இதுபோன்ற திதி நாளில் பிண்டம் பிடித்து செய்யப்படும் வழிபாடு அந்த உயிரை மீண்டும் நிலையிறங்கச் செய்து நிலை கலங்கச் செய்துவிடும். எனவே தான் இராமலிங்க வள்ளலார் இறந்தவர்க்கு இது போன்ற பிண்ட வழிபாடு செய்யும் திதி செய்தல் வேண்டாம் என்று உபதேசத்தில் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். சிவமான உயிரை சிவமாகவே வைப்பதோடல்லாமல் இங்கு கூறிய திருமுறை முற்றோதல் மேலும் உயர் நிலைக்கு உயிரைக் கொண்டு செல்லும். காரணம், முற்றோதல் வழிபாடுகள் அடியார்களைக் கொண்டு செய்யப்படுவது; அடியார் பூசையாகிய மாகேசுர பூசையுடன் அவர்களுக்கு சோறிடுதலோடு முடிவது.

Continue reading